×

பாமக கொடியை கட்டுவதா? ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் வாக்குவாதம்

வந்தவாசி: ராம்தாஸ் கட்சி வேட்பாளர் காரிலிருந்து பாமக கொடியை அகற்றக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வந்தவாசியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் ராமதாஸ் தலைமையிலான பாமக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர் போட்டியிடுகிறார். இவர் நேற்று வந்தவாசியில் உள்ள முன்னாள் எம்பி எம்.துரை உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற வந்தவாசிக்கு வந்தார்.

பின்னர், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி புறப்பட சென்றார். அப்போது அங்கு வந்த அன்புமணி தலைமையிலான பாமகவை சேர்ந்த முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் மச்சந்திரன், நகர செயலாளர் பேட்டரி வரதன், ஒன்றிய செயலாளர் வேலு ஆகியோர், முரளி சங்கரின் காரை வழிமறித்து காரில் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பாமக கொடியை அகற்றவும், வேட்பாளர் அணிந்திருந்த பாமக கட்சி துண்டை அப்புறப்படுத்தக்கோரி வாக்குவாதம் செய்தனர்.

அப்போது ராமதாஸ் பாமக மாவட்ட செயலாளர் சீனிவாசன், நாங்கள் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்தவில்லை. கட்சி கொடி ராமதாஸ் உருவாக்கியது என கூறினார். அதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேலு, ராமதாஸ் பிரிவு நகர செயலாளர் லட்சுமணனை ஒருமையில் பேசி கொடியை அகற்றாமல் வீண் வாக்குவாதம் செய்தால் நடப்பதே வேறு என மிரட்டினாராம்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் வந்து, இரு தரப்பினரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது முரளி சங்கரின் கார் டிரைவர், காரில் இருந்த கட்சி பாமக கொடியை அகற்றினார். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : PMK ,Ramadoss ,Anbumani ,Vandavasi ,Ramdoss' ,Murali Shankar ,general secretary ,Tiruvannamalai district ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...