- அஇஅதிமுக
- எடப்பாடி
- AMMK
- ஜோலார்பேட்டை
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- ஜோலார்பேட்டை சந்திப்பு
- திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை: கூட்டணி தயவில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பேசி உள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மாலை அவர் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ஜோலார்பேட்டை அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை மட்டும் ஏற்றிக்கொண்டார்.
திருப்பத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஞானசேகரனை தனது வாகனத்தில் ஏற்றவில்லை. இதனால் தனித்துவிடப்பட்ட அவர், அங்கு கொண்டுவரப்பட்டு நிறுத்திய மற்றொரு வாகனத்தில் ஆதரவாளர்களுடன் ஏறிக்கொண்டார். அங்கிருந்தபடி அவரது ஆதரவாளர்கள் குக்கர் சின்னத்தை காண்பித்தனர். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி சம்பிரதாயத்திற்காக ஒரே ஒருமுறை மட்டுமே அமமுக வேட்பாளர் பெயரை கூறி அவருக்கு ஆதரவளிக்கும்படி பேசி பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.
இதேபோல, சிவகங்கையில் கடந்த 1ம் தேதி பிரசாரத்தின்போது, சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை மட்டும் வேனில் ஏற்றிக்கொண்டார். காரைக்குடி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை வேனில் ஏற்றவில்லை. பிற பிரதான கட்சிகள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் தங்கள் வாகனத்தில் ஏற்றி வாக்கு சேகரிக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணி வேட்பாளரை தொடர்ந்து தவிர்ப்பது அமமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிய போது, அந்த தொகுதியில் பாஜ வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை தனது வாகனத்தில் ஏற்றி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பேசுகையில், ஜனநாயகம் உள்ள கட்சி அதிமுக. கூட்டணி தயவில் அதிமுக இல்லை.
வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி வைத்துள்ளோம். இந்த தேர்தலில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள். அதிமுக ஆட்சி வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். 3 மாதத்தில் கஞ்சா நடமாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும். அதிமுகவிற்கு கொள்கை நிலையானது. சிறுபான்மையின மக்களை இமைபோல் பாதுகாத்து வருகிறோம்’’ என்றார். கூட்டணி தயவில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
