×

கொலை வழக்கில் ஆஜராகாத விஜய் மெய்க்காப்பாளருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த விஜய்யின் மெய்க்காப்பாளருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. திண்டுக்கல் முத்தழகுபட்டியில் கடந்த 2018ம் ஆண்டு சக்திவேல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபிபுல்லா, போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ் ராஜ் உள்பட 12 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே இன்ஸ்பெக்டராக இருந்த சபிபுல்லா பதவி உயர்வு பெற்று டிஎஸ்பியாக மாற்றலாகி சென்றார். பின்னர் கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு வேண்டுமென காவல் துறையில் விண்ணப்பித்து முறைப்படி பணி ஓய்வு பெற்று சென்றுள்ளார். தற்சமயம் சபிபுல்லா தவெக நிர்வாகியாகவும், நடிகர் விஜய்யின் மெய்க்காப்பாளராகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

சக்திவேல் கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் சபிபுல்லா நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்த வழக்கு உரிய விசாரணையின்றி நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காலம் கடத்தி வந்த சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே ராஜகோபால் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்.6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags : Vijay ,Dindigul ,Sakthivel ,Muthazhakupatti, Dindigul ,Dindigul South Police Station ,
× RELATED டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில்...