புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஷெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவன பங்க்களில் டீசல் லிட்டருக்கு ரூ.123.52 ஆகவும், பெட்ரோல் ரூ.119.85 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.
ஈரானின் முக்கிய எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதால், கத்தாரின் மிகப் பெரிய எண்ணெய் வயலை ஈரான் தாக்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தனியார் எண்ணெய் நிறுவனமான ஷெல், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதே போல், தனியார் நிறுவனமான ‘நயாரா’ ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது என குறிப்பிடத்தக்கது.
