×

இந்தியாவில் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்..!!

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, டிவி, இருசக்கர வாகனம், கணினி உள்ளிட்ட பொருட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட 33 கேள்விகள் இதில் கேட்கப்படும். தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டில் வரும் ஜூலை 17ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன. முதற்கட்ட பணிகளுக்கு பிறகு 2027 பிப்ரவரியில் 2ம் கட்ட பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக, இன்று முதல் 15 ஆம் தேதி வரை டெல்லி, கோவா, கர்நாடகா, ஒடிசா, சிக்கிம், மிசோரம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகளில் சுயவிவர கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்திய அரசின் சுயகணக்கெடுப்பு இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே செல்போன் எண் மற்றும் பிற அடிப்படை விவரங்கள் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வெற்றிகரமாக பூர்த்தி செய்த உடன், ஒரு தனித்துவமான சுய கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்படும். அதனை, கணக்கெடுப்பிற்கு வரும் பணியாளர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜூலை 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சுயவிவர கணக்கெடுப்பும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீட்டு பட்டியல் கணக்கெடுப்பும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : India ,New Delhi ,
× RELATED விமான எரிபொருள் விலை இரு மடங்கு உயர்வு: விமானக் கட்டணம் உயர வாய்ப்பு