×

போக்குவரத்திற்கு இடையூறு மத்திய பஸ் நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்

திருப்பூர், ஏப்.1:திருப்பூரில் மூன்று பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய பஸ் நிலையம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பஸ் நிலையம் தரம் உயர்த்தப்பட்டது. திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், பழனி, பொள்ளாச்சி, உடுமலை, கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

திருப்பூரின் மைய பகுதியில் அமைந்துள்ள பஸ் நிலையம் என்பதால் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் மத்திய பஸ் நிலையத்தின் முன்பு ஏராளமானோர் சாலையோர கடைகள் அமைத்து கம்மங்கூழ், டிபன் கடை உள்ளிட்டவை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த சாலையோர கடைகளால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. இதனால் போக்குவரத்து போலீசார் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பு சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளை நேற்று அப்புறப்படுத்தினர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தில் கடைகளை அமைத்துக்கொள்ள அறிவுறுத்தினர்.

 

Tags : Tiruppur, Ap. 1 ,Tiruppur ,bus station ,Tiruppur Central Bus Station ,Erode ,Salem ,Palani ,
× RELATED 2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது