திருப்பூர், மார்ச் 29: திருப்பூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் திமுக 7 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக நேரடியாக 4 தொகுதிகளில் மோதவுள்ளன. 2 தொகுதிகளில் பாஜவை எதிர்த்து களமிறங்கியுள்ளது. இதில் காங்கயத்தில் திமுக சார்பில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அதிமுக சார்பில் என்.எஸ்.என் நடராஜனை எதிர்த்து போட்டியிடுகிறார். தாராபுரத்தில் திமுக சார்பில் டாக்டர் இந்திரானி, அதிமுக சார்பில் முன்னாள் ஊராட்சிகுழு தலைவர் சத்தியபாமாவை எதிர்கொள்கிறார். உடுமலைப்பேட்டையில் திமுக சார்பில் ஜெயக்குமார், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுகிறார்.
பல்லடத்தில் திமுக சார்பில் க.செல்வராஜ், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவத்தை எதிர்கொள்கிறார். இரு பெரும் கட்சிகளும் நேருக்கு நேர் மோதுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு திருப்பூர் மாவட்டத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக நேரடியாக பாஜ வேட்பாளர்களை எதிர்கொள்கிறது. அவிநாசியில் திமுக சார்பில் டாக்டர் கோகிலாமணி, திருப்பூர் தெற்கு தொகுதியில் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக சார்பில் மடத்துக்குளம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகவேலுவை எதிர்த்து திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார். மீதமுள்ள திருப்பூர் வடக்கு தொகுதி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆணந்தன் களமிறக்கப்பட்டுள்ளார். பரப்பரான தேர்தல் களத்தில் திருப்பூரின் அரசியல் களம் திராவிடக் கட்சிகளுக்கும், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையாக மாறியுள்ளது.
