ஊட்டி,மார்ச்31: ஊட்டி அருகே மார்லிமந்து தோடர் பழங்குடியின கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் நார்னார்ஸ் எனப்படும் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடியின மக்கள் மந்து என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் உதகை அருகே உள்ள மார்லிமந்தில் 10-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் 1952ம் ஆண்டு பாரம்பரிய முறைபடி புல், மூங்கில் மற்றும் பிரம்பு ஆகியவறை கொண்டு பிறை வடிவிலான கோயிலை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.
74 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் கூரை மற்றும் நுழைவாயில் பகுதி 30 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வந்தது. இதனையடுத்து கோயிலின் கூரை மற்றும் நுழைவாயில் பகுதியை மாற்ற தோடர் பழங்குடியினர் முடிவு செய்தனர். இதனையடுத்து ஆண்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு அப்பர் பவானி மற்றும் கோரகுந்தா வன பகுதிகளுக்கு சென்று அவ்வுல் என்ற புற்கள், மூங்கில் மற்றும் பிரம்பு போன்ற பொருட்களை கொண்டு வந்து கடந்த இரண்டு மாதங்களாக புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக கூரை வேய்து கோயிலின் நார்னார்ஸ் எனப்படும் கும்பாபிஷேக திருவிழா நேற்று நடத்தப்பட்டது. விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள 60க்கும் மேற்ப்பட்ட மந்துகளை சேர்ந்த தோடர் பழங்குடியின ஆண்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் மார்லிமந்திற்கு வந்தனர். பின்னர் கோயிலின் கூரையை மாற்றி புதிய புற்கள் வேயபட்டு நுழைவு வாயில் பகுதி பழமை மாறாமல் வடிவமைக்கபட்டது.
இந்த பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாடல் பாடி புதிய புற்கள் வேயபட்ட பின்னர் ஒன்று கூடி காணிக்கை செலுத்தி மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், எருமைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும் தோடர் பழங்குடியின ஆண்கள் கோயில் முன் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தியவாறு வட்டமாக நின்று தங்களது கலாச்சார நடனமாடினர். 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தோடர் பழங்குடியினரின் நார்னார்ஸ் எனபடும் கும்பாபிஷேக திருவிழா மற்றும் தோடர் ஆண்களின் கலாச்சார நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
