×

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

 

ஊட்டி,மார்ச்29: 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆண்டு தோறும் கோடை காலமான மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப்பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். அதே சமயம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் நிலையில், ஊட்டியின் குளிர்ச்சியை அனுபவிக்க மற்ற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது சமவெளிப் பகுதியில் வெயில் வாட்டி வருவதால் முன்னதாகவே ஊட்டியை முற்றுகையிட வாய்ப்புள்ளது.

எனினும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருந்த நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. மேலும், தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. வார விடுமுறை நாட்களில் மட்டும் ஓரளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்நிலையில், 11, 12ம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்தது. மேலும், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் முடிந்த நிலையில், இந்த வாரம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், இரு நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்குகிறது.

எனவே, ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர வாய்புள்ளது. அதேசமயம், இம்முறை சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் காட்டினால்,அதனை பறிமுதல் செய்வதில்லை எனவும், கூடுதலாக எடுத்து வந்தாலும், அதற்கான ஆவணங்கள் காண்பித்தால், 24 மணி நேரத்திற்குள் பணம் திரும்ப வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இம்முறை சுற்றுலா பயணிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது.

 

Tags : Ooty ,
× RELATED முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் நொிசல்