மதுரை, ஏப். 1: மதுரையில் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டில் விடத்த டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்கார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை, செல்லூரை சேர்ந்தவர் கணேஷ்குமார்(37). இவர் தமிழ்நாடு காவல்துறையில் வேலை பார்த்து வந்த நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிரொலியாக கடந்த 2022ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தற்போது தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
இவரது மனைவி சுருதி(29) தனது கணவர், மற்றொரு பெண்ணுடன் சில நாட்களுக்கு முன் நெருக்கமாக ஊர் சுற்றியதை பார்த்துள்ளார். இதனால் வீட்டிற்கு வந்த கணவரை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்குமார், மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். இந்நிலையில் கணவர் தன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக, சுருதி செல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
