கோவை,ஏப்.1: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவதுஅதிகரித்து வருகிறது. இதனிடையே காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ரூ.5 கோடி செலவில், அட்டுக்கல் முதல் பொம்மணம்பாளையம் வரையிலான 10 கி.மீ. தொலைவிற்கு யானை புகாத நவீன வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை, கெம்பனூர் யானைமடவு என்ற இடத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றது. அப்போது நவீன வேலி தடுத்ததால், அந்த யானை கம்பி மீது கால்களை வைத்து தாண்டி செல்ல செல்ல முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால், அந்த யானையால் வேலியை தாண்டி செல்ல முடியவில்லை. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து அந்த யானையை அங்கிருந்து விரட்டினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
