வானமாமலை கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் நாங்குநேரியை அதிக வசதி கொண்ட தொகுதியாக மாற்றுவேன்

நெல்லை, ஏப்.1: நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து, நாங்குநேரியை அதிக வசதி கொண்ட தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் எனக்கூறி வீதி, வீதியாகச்சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் (தோட்டாத்ரி நாதன் கோயில்) பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர், வீதி வீதியாக நடந்து சென்று அப்பகுதி மக்களிடம் ‘நாங்குநேரி தொகுதியை அதிக வசதி கொண்ட முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தருவேன்’ என்று கூறி ‘குக்கர்’ சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், அமைப்பு செயலாளர் பரமசிவம், மருத்துவரணி இணைச் செயலாளர் நோவா செல்வராஜ், எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் சீனிக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாளை பொன்னுச்சாமி, நெல்லை ஆறுமுகம், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட அமமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை, ஏப் 1: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற திருமண விழாவில், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில், பூந்தமல்லி தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளரான குட்டி (எ) பிரகாசம் (45) என்பவரை, பூந்தமல்லி (தனி) தொகுதி தவெக வேட்பாளராக, கட்சி தலைவர் விஜய், கடந்த 29ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி திருவள்ளூரில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு விழாவில், தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற போது, திருவள்ளூர் அடுத்த திருவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவியும், தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியுமான சங்கீதா (43) என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அருகில் இருந்த தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான குட்டி (எ) பிரகாசம் என்பவர், பெண் நிர்வாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என வற்புறுத்தியும் உள்ளார். இதுகுறித்து சங்கீதா, தனது கணவர் மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியான அவர், குட்டி (எ) பிரகாசத்தின் மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அவர், ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகவும், எல்லாவற்றிற்கும் அனுசரித்தால் மட்டுமே கட்சியில் பயணிக்க முடியும் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர், தவெக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனால் சங்கீதா மணிகண்டன், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக வேட்பாளர் பட்டியலில் பூந்தமல்லி தொகுதியில் தவெக சார்பில் குட்டி (எ) பிரகாசம் போட்டியிட போவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததால், சங்கீதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் குட்டி (எ) பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் குட்டி (எ) பிரகாசம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.