மயிலம், ஏப்.1: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தையொட்டி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலம் 20ம் பட்டம் பாலய சுவாமிகள் தலைமை தாங்கி கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து முருகனுக்கு தினமும் பால், தயிர், நெய் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம், சுவாமி ஊர்வலம் என நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று அதிகாலை 5:45 மணி அளவில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தேர் காலை 7.10 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மகா தீபாராதனை செய்தனர். பின்னர் மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முருக பக்தர்கள் தீர்த்குளத்தில் நீராடி முடி காணிக்கை செலுத்தி, பன்னீர், பால், புஷ்ப காவடிகள் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் பெண்கள், குழந்தைகள் என பலர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். சென்னை, புதுவை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
