பெரம்பலூர்,மார்ச் 31: பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் சித்தேரி கரையோர தனியார் வயலில் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிற்காலச் சோழர் காலத்து அய்யனார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அய்யனார் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பரவலாக வழிபடப்படும் ஒரு பழமையான காவல் தெய்வம் ஆகும். பெரும்பாலான ஊர்களில் நீர்நிலைகள், வயல் வெளிகள் மற்றும் வனப் பகுதிகளில் அய்யனார் கோயில்களில் அமைந்திருக்கின்றன. பொதுவாக, அய்யனார் கோயில்களில் பரிவார தெய்வங்கள், குதிரை, யானை ஆகியவற்றின் சுடுமண் அல்லது சுதைச் சிற்பங்கள், ஈட்டி, சூலம், அரிவாள் போன்ற ஆயுதங்கள் காணப்படுகின்றன. அய்யனார் சமண சமயத்தில் பிரம்ம சாத்தன் எனவும் பௌத்த சமயத்தில் சாத்தன்,சாஸ்தா எனவும் அழைக்கப்படுகிறார்.
சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் வரை அய்யனார் வழிபாடு குறித்த பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் அய்யனார் கோயில்கள், அவற்றுக்கு வழங்கப்பட்ட நிலக் கொடைகள் குறித்த ஏராளமான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வழிபாடு இன்றி வயல் வெளிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் தனித்த அய்யனார் சிற்பங்களும் ஆங்காங்கே தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் செல்வபாண்டியன், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்ட போது, பிற்சோழர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளார்.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் செல்வ பாண்டியன் கூறியதாவது : இந்த சிற்பம் பிற்சோழர் காலத்தை, குறிப்பாக கி.பி 10 முதல் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பொதுவாக அய்யனார் தனியாகவோ அல்லது தம் துணைவியர்களான பூரணி, பொற்கலை ஆகியோரில் ஒருவருடனோ அல்லது இருவருடனோ காணப்படுவார். சில சிற்பங்களில் அவரது வாகனமான யானை அல்லது குதிரை காட்டப்படும். அபூர்வமாக சில சிற்பங்களில் நாய் மற்றும் பறவைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அரும்பாவூர் அய்யனார்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள அரும்பாவூர் கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்து தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையின் வட புறத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான வயல்வெளியில் அய்யனார் சிற்பம் உள்ளது. இது அரும்பாவூர் சித்தேரியின் கரையோரப் பகுதி வயலாகும்.
சிற்பத்தின் அமைப்பு:
68 செமீ. உயரமும் 51செமீ அகலமும் கொண்ட இச்சிற்பம் அமர்ந்த நிலையில் -உத்குடி ஆசனத்தில் அமைக்கப் பட்டுள்ளது. தலைப் பகுதியில் மகர பூரிமத்துடனான ஜடாபாரம், நெற்றிப்பட்டம், காதுகளில் பனையோலைக் குண்டலங்கள், வலது கரத்தில் செண்டாயுதத்துடனும் இடது கரம் தண்ட ஹஸ்தத்திலும் அமைகிறது. கழுத்தில் சரப்பளி, சரிந்த தோள்மீது தோள் மாலை, பிரம்ம முடிச்சுடனான முப்புரி நூல் (உபவீதம்), கேயுரத்துடன் தோள் வளை, உதர பந்தம், இடையில் இடைக்கட்டுடன் குறங்கு செறி கால்களில் வீரக் கழல்கள் உள்ளன. பராமரிப்பற்ற நிலையில் முகமும் உடல் பகுதிகளும் சிதைந்து காணப்படுகின்றன.
இந்த சிற்பம் வழிபாட்டில் இல்லை என்பதை இதற்கு அணிவிக்கப்பட்டுள்ள பழந்துணியும் எண்ணெய் காணாத அகல்விளக்கும் உணர்த்துகின்றன. அருகில் உள்ள பயிரிடப்படாமல் தரிசாக விடப்பட்ட வயல் பகுதியில் பெரும் காடென முளைத்துள்ள முட்செடிகள், புதர்கள் ஆகியவை சுகாதாரக் கேட்டிற்கும் வழி வகுக்கின்றன. அரும்பாவூர் சிவன் கோவிலில் இருக்கும் மூன்றாம் இராஜராஜனின் (கி.பி. 1229) கல்வெட்டு, இவ்வூரில் உள்ள ஐயன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறித்து குறிப் பிடுகிறது.
எனவே இந்த பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரு அய்யனார் கோயில் இருந்திருக்க வேண்டும்.காலப் போக்கில் வழிபாடு இன்றி, கோயில் சிதைந்து, விளை நிலங்களாய் மாறி இருக்கலாம். அப்போது இங்கு இருந்த அய்யனார் கோயிலில் வழிபாட்டில் இருந்த சிற்பம், இதுவே ஆகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அரும்பாவூரின் தொன்மைக்கு சான்றாக விளங்கும் இந்த ஐயனாரை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க உடனடியாக ஒரு நிழற் குடை அல்லது சிற்றாலயம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டு கோளாகும்.
