- தஞ்சாவூர் அன்னை சத்யா அரங்கம்
- தஞ்சாவூர்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026…
தஞ்சாவூர், மார்ச் 31: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட பிரிவு சார்பில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ஐ முன்னிட்டு வக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுரைக்கிணங்க, அன்னை சத்யா விளையாட்டரங்கில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.
இதில் ஆண்களுக்கான ஓட்டப்போட்டி அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலிருந்து துவங்கி மருத்துவக்கல்லூரி வரை சென்று மீண்டும் அன்னை சத்யா விளையாட்டரங்கம் வந்தடைந்தது. பெண்களுக்கான ஓட்டப்போட்டி அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலிருந்து துவங்கி நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வரை சென்று மீண்டும் அன்னை சத்யா விளையாட்டரங்கம் வந்தடைந்தது. மேலும், இப்போட்டியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டியன், தனி துணை ஆட்சியர் சௌமியா, துணை ஆட்சியர் (பயிற்சி) கமலேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சுமார் 150 பேரும், பெண்கள் பிரிவில் சுமார் 50 பேரும் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசு மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளி கௌதம், இரண்டாம் பரிசு எஸ்.எம்.அரவிந்த் மாறன், மூன்றாம் பரிசு ராபின் மற்றும் பெண்கள் பிரிவில் பிரிவில் முதல் பரிசை தஞ்சை தூய வளனார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பார்கவிவும், இரண்டாம் பரிசை பிரித்திகாவும், மூன்றாம் பரிசு சிவானியும் பெற்றனர். மேலும், விளையாட்டரங்கில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களிடையே வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், விளையாட்டு துறை மற்றும் தஞ்சாவூர் தடகள சங்கம் ஆகி யோர் இணைந்து செய்திருந்தனர்.
