×

திருச்சி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.3.78 லட்சம் பறிமுதல்

 

திருவெறும்பூர், மார்ச் 31: திருச்சி மாவட்டத்தில் நேற்று பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.3.78 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அமைத்து ரூ.50,000க்கு மேல் உரிய ஆவணமின்றி ரொக்கத்தை எடுத்துச் செல்பவர்களிடமிருந்து, பணத்தை பறிமுதல் செய்வதோடு, பரிசுப் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில் திருவெறும்பூர் அடுத்த வேங்கூர் பூசத்துறை பகுதியில் எப்எஸ்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை பரிசோதித்தனர். திருச்சி சஞ்சீவி நகர் பொன்மணி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சத்யா (47) என்பவர் நெல் மூட்டைகள் விற்ற பணம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் எடுத்து வந்தார்.

அதற்கு உரிய ஆவணம் இல்லை எனக் கூறி அதனை தேர்தல் பறக்கும்படை அதிகாரி நாகலட்சுமி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து, திருவெறும்பூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் அகலங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் வால்டர் ரிச்சர்ட் தனது பைக்கில் லால்குடி அடுத்த மணக்கால் வழியாக வந்துள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுலைமான் பைக்கை வழிமறித்து சோதனை செய்துள்ளார். அப்போது வாட்டர் ரிச்சர்ட் ரூ.53 ஆயிரம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரியவந்து அப்பணத்தை பறிமுதல் செய்து லால்குடி தேர்தல் நடத்தும் துணை அதிகாரி தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனர்.

முசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா.பேட்டை முசிறி பிரிவு ரோடு அருகே கண்காணிப்பு குழு அலுவலர் சுகன்யா தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்தவர் நீலியாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பல்வேறு கடைகளுக்கு மருத்துவ சாதனங்களை விற்பனை செய்துவிட்டு, அதற்கான தொகையான ரூ.75,300ஐ உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்ததாக தெரிகிறது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து முசிறி சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

சமயபுரம் டோல்பிளாசா அருகே திருமதி பிரியஜனனி என்பவரது தலைமையிலான தேர்தல் குழு பறக்கும் படையினர் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திருச்சி சுப்ரமணியபுரம், ப்ரோபோசர் காலனி பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1,15,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூர் துணை தாசில்தார் மூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Trichy district ,Thiruverumpur ,Tamil Nadu ,
× RELATED முசிறி சப்-கலெக்டர் ஆய்வு: மின்னணு இயந்திரங்களை கையாளுவது எப்படி?