×

தொண்டர்கள் விரும்பிய வேட்பாளர்கள் போட்டி தேர்தல் களத்தில் சூடு பிடித்த திருமயம்

 

திருமயம், மார்ச் 31: திமுக, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்த வேட்பாளர்கள் போட்டியிடுவதால் திருமய தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதி சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 1952 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 17 வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே இதுவரை நடைபெற்ற 16 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலும் திருமயம் சட்டமன்ற தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்த நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து திருமயம் தொகுதி திமுக வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவிடம் அதிமுக வெற்றியை இழந்தது. இதனால் தற்போது திமுகவின் நம்பிக்கையான தொகுதியாக திருமயம் சட்டமன்ற தொகுதி இருந்து வருகிறது. இதனிடையே திருமயம் தொகுதியில் கடந்த இரண்டு முறை திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ரகுபதி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அதே சமயம் அதிமுக சார்பில் கடந்த 3 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக மாவட்ட செயலாளர் பி கே வைரமுத்து போட்டியிட்டு ஒரு முறை வெற்றியும் இரண்டு முறை தோல்விகளையும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் அமைச்சர் ரகுபதிக்கும், அதிமுக சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பி கே வைரமுத்துக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. அவர்களின் எதிர்பார்ப்புகளின் படி திமுக சார்பில் ரகுபதியும், அதிமுக சார்பில் வைரமுத்துவும் களம் காண்கின்றனர். இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்புகள் படி முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் திருமயம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இதில் ஆளுங்கட்சியாக இருந்து திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ரகுபதிக்கு கடந்த முறை திருமயம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சுமார் 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற தமிழர் தேசம் கட்சி ஆதரவு, மற்றும் கூட்டணி கட்சி ஆதரவு திமுகவிற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்திருந்த அதிமுக ஒன்று சேர்ந்து பிஜேபியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதால் அதிமுகவிற்கும் சம பலம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ரகுபதி கடந்த காலங்களில் திமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள், திருமயம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது,

தற்போது திமுக வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிக்கை குறித்து வாக்காளர்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதேபோல் அதிமுக சார்பில் களம் காணும் மாவட்ட செயலாளர் பி கே வைரமுத்து தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் அடிப்படையில் வாக்குறுதிகள் அளித்தும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்க உள்ளார். இதனால் திருமயம் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளே அதிக பலத்தில் உள்ளது. எனவே திருமயம் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறலாம் என தொகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதேசமயம் தற்போது புதிதாக களம் கண்டுள்ள தவெக எவ்வளவு சதவீதம் வாக்குகள் பெறும், எந்த கட்சியினருடைய வாக்குகளை பெரும் என்பதை பொறுத்தும் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படலாம் என அரசியல் விமர்சரர்கள் தெரிவித்தனர்.

Tags : Thirumayam ,Thirumaya ,DMK ,AIADMK ,Thirumayam Assembly ,Pudukkottai district ,India ,
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டத்தில் 100 சதவீதம்...