கோவை,மார்ச்31: கோவை மாவட்டத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். தொண்டாமுத்தூரில் நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்தனர். 8 ஆண்கள், 7 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நாம் தமிழர் தவிர முக்கிய அரசியல் கட்சியினர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பல நூறு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். தேர்தல் விதிகளின் படி ஆட்கள், வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘ மனு தாக்கல் செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு தவறுகள் சுட்டி காட்டி சரி செய்ய உதவி செய்யப்பட்டது. கூட்டம் அதிகமாக இல்லாததால் வேட்பாளர்கள் எளிதாக மனு தாக்கல் செய்தனர். இன்று (31ம் தேதி) அரசு விடுமுறை நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. நாளை மனு தாக்கல் செய்யலாம். ஒரே நாளில் அதிக வேட்பாளர்கள் வந்தால் கூட்டத்தை சமாளிக்க வரிசை முறை பின்பற்றப்படும். இல்லாவிட்டால் சுவிதா வெப்சைட்டில் புக்கிங் செய்து அந்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம், ’’ என்றனர்.
