திருமலை: பணம் கேட்டு தொல்லை கொடுத்த காதலியை கொன்று துண்டு, துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை டெக்னீஷியன் போலீசில் சரண் அடைந்தார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், ராஜத்தை சேர்ந்தவர் ரவீந்திரா(35), இந்திய கடற்படையில் விமான தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவர் கஜுவாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ரவீந்திராவுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில் விசாகப்பட்டினம் சாளகிராமபுரத்தைச் சேர்ந்த மவுனிகா(29) என்ற இளம்பெண்ணுடன் ரவீந்திராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து காதலிக்க தொடங்கிய இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துள்ளனர். இந்நிலையில் ரவீந்திராவின் தகாத உறவு குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன், அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரவீந்திராவின் மனைவி கோபித்துக்கொண்டு விஜயநகரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி வீட்டில் இல்லாத நிலையில் ரவீந்திரா, நேற்றுமுன்தினம் இரவு மவுனிகாவை தனது வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது மவுனிகா, தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் எனக்கேட்டுள்ளார். ஆனால் மனைவி பிரிந்து சென்ற மன அழுத்தத்தில் இருந்த ரவீந்திரா பணம் தர மறுத்துள்ளார். இதனால் இவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த ரவீந்திரா, காதலி மவுனிகாவை அடித்துக்கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் வைத்து வீட்டில் உள்ள பிரிட்ஜ்ஜில் அடைத்துள்ளார். ஆனாலும், தான் போலீசிடம் மாட்டிக்கொள்வோம் எனக்கருதிய ரவீந்திரா, கஜுவாக்கா போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மவுனிகாவின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியை கொன்று துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
