×

அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டுப்பாட்டில் மோடி: கோட்டயத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இந்தியாவின் மிக முக்கிய ரகசியங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டார் என்றும், டிரம்பின் கட்டுப்பாட்டில் தான் மோடி உள்ளார் என்றும் கோட்டயத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளா வந்தார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் 3 இடங்களில் பிரசாரம் செய்த பின்னர் கோட்டயம் மாவட்டத்திலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கோட்டயம் பாம்பாடியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ரப்பருக்கான ஆதரவு விலை ரூ. 250 ஆக உயர்த்தப்படும். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். நரேந்திர மோடி இந்தியாவின் மிக முக்கிய ரகசியங்கள் அனைத்தையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டார். இந்தியாவின் முக்கிய விவரங்களை அமெரிக்கா தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை வாங்குவதாக அமெரிக்காவுக்கு மோடி உத்திரவாதம் அளித்துள்ளார்.

அப்படி என்றால் மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆகும் என தெரியவில்லை. இப்போது டிரம்பின் கட்டுப்பாட்டில் தான் மோடி உள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள விவரங்கள் வெளியாகாதது தான் இதற்கு முக்கிய காரணமாகும். இன்னும் வெளிவராத மூன்றரை மில்லியன் கோப்புகள் வெளியிடப்பட்டால் மோடியின் உண்மையான முகம் நம் நாட்டு மக்களுக்கு தெரியவரும். மோடியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் டிரம்பிடம் உள்ளன. அதானி ஒரு சாதாரண நிறுவனம் மட்டுமல்ல, அது பாஜவின் நிதி அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். அதானி தொடர்பான எல்லா ரகசியங்களும் டிரம்புக்கும், அமெரிக்காவுக்கும் தெரியும். இந்த விவரங்களை வைத்து மோடியை பிளாக் மெயில் செய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

* இடதுசாரி கூட்டணிக்கு பா.ஜ. ஆதரவு
ராகுல்காந்தி மேலும் பேசுகையில்,கேரள தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி, பாஜ இணைந்த கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. பாஜவின் முழு ஆதரவு உள்ள இடதுசாரி கூட்டணியை தான் காங்கிரஸ் எதிர்கொள்கிறது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வருவதை பாஜ விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு காங்கிரஸ் மட்டும் தான் பெரும் சவாலாக இருக்கிறது. நான் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பாஜவை நேருக்கு நேர் எதிர்ப்பவர்கள் மீது மட்டும் தான் வழக்கு பாயும். என் மீது 36 வழக்குகள் உள்ளன. 55 மணிநேரத்திற்கும் அதிகமாக என்னிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் பல புகார்கள் இருந்தும் கேரள முதல்வர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதிலிருந்தே பாஜவுக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே மறைமுக உறவு இருக்கிறது என்பது புரியும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சபரிமலை தங்கத்தை திருடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* பெண் முதல்வராக வேண்டும்
கேரளாவில் ஒரு பெண் முதல்வராக வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாகும். பெண்கள் தான் கேரளாவின் அஸ்திவாரமாக உள்ளனர். பெண்களால் தொலைநோக்குடன் சிந்திக்க முடியும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திட்டம் கொண்டு வரப்படும். பெண்கள் தான் கேரளாவின் எதிர்காலம் என்று ராகுல்காந்தி கூறினார்.

Tags : Modi ,US ,President ,Trump ,Rahul Gandhi ,Kottayam ,Thiruvananthapuram ,India ,Congress ,
× RELATED மம்தா பானர்ஜி வாக்காளர்களை மிரட்டுகிறார்: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்