×

ஏப்.14க்குப் பிறகு ஆட்சி மாற்றம் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் நிதிஷ்குமார்: பீகாரின் அடுத்த முதல்வர் யார்?

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்ற யூகங்கள் சூடுபிடித்துள்ளன. கடந்த 1ம் தேதி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது நீண்டகால விருப்பமான மாநிலங்களவை உறுப்பினராக விரும்புவதாக அறிவித்தார். இதன் மூலம் புதிய ஆட்சி அமைந்த 4 மாதத்திலேயே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், நிதிஷ்குமார் நேற்று தனது எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் விலகுவதற்கான கவுன்டவுன் தொடங்கியிருக்கிறது.

மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத பிறகும் ஒருவர் 6 மாதங்கள் வரை முதல்வராக தொடரலாம் என அரசிலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்த மாத தொடக்கத்தில் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளதால் அவ்வளவு காலம் முதல்வர் பதவியில் அவர் நீடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 14ம் தேதியுடன் கர்மாஸ் எனப்படும் காலம் முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுவது வழக்கம். எனவே, வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பீகாரில் ஆட்சி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமாருக்குப் பிறகு முதல்வர் பதவி ஐக்கிய ஜனதா தளத்திற்கு தராமல் பாஜவுக்கு வழங்கப்படும் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு சில நிபந்தனைகளும் முதல்வர் பதவியை ஐக்கிய ஜனதா தளம் விட்டுக் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே 20 ஆண்டுகளாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாஜ முதல் முறையாக பீகாரில் முதல்வர் பதவியை கைப்பற்ற உள்ளது.
இதோடு, முதல்வராக பதவி ஏற்க உள்ள பாஜ தலைவர் யார் என்ற யூகங்களும் பரபரப்பாக பேசப்படுகின்றன. இதில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தவிர, அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவரான ஒன்றிய உள்துறை இணை அமைச்சராக உள்ள நித்யானந்த் ராய் பெயரும் அடிபடுகிறது. எனவே இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பாஜ தேசிய தலைவர் எம்எல்ஏ பதவி ராஜினாமா
கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த நிதின் நபின், கடந்த ஜனவரியில் ஜே.பி.நட்டாவுக்குப் பிறகு பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 16ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலில் நிதின் நபின் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நிதின் நபின், பாங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

Tags : Chief Minister ,Nitish Kumar ,MLC ,Chief Minister of ,Bihar ,Patna ,State Legislative Council ,
× RELATED மம்தா பானர்ஜி வாக்காளர்களை மிரட்டுகிறார்: தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்