புதுடெல்லி: காஸ் சிலிண்டர் நெருக்கடிக்கு மத்தியில், வீட்டு சமையல் மற்றும் விளக்கு ஏற்றும் தேவைகளுக்காக, தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் ரேஷனில் மீண்டும் மண்ணெண்ணெயை தற்காலிகமாக வழங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. மேற்கு ஆசியா போர் காரணமாக எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதால் ஓட்டல்கள், உணவகங்களுக்கான வர்த்தக சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டிருக்கிறது. தற்போது கிடைக்கக் கூடிய எல்பிஜி விநியோகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், குறைந்த கையிருப்பு காரணமாக மக்கள் பீதியுடன் காஸ் சிலிண்டர்களை வாங்குவதில் அவசரம் காட்டி வருகின்றனர். இதனால் காஸ் சிலிண்டர் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில், முன்னர் மண்ணெண்ணெய் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதும் சமையல் செய்யவும், விளக்கு ஏற்றவும் மண்ணெண்ணெயை தற்காலிகமாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக, கடந்த 29ம் தேதியிடப்பட்ட அரசிதழில், ‘உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரேஷனில் மண்ணெண்ணெய் இல்லாத மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் ரேஷனில் மண்ணெண்ணெயை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது, சமையல் செய்யவும், விளக்கு ஏற்றவும் வீடுகளுக்கு மண்ணெண்ணெயை உடனடியாக விநியோகிக்க வழிவகுக்கும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். அடுத்த அறிவிப்பு வரும் வரை அல்லது அடுத்த 60 நாட்களுக்கு இது அமலில் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
