×

கடந்த 10 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரண்: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் நாளைய தினத்துக்குள் நக்சல் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க ஒன்றிய அரசு உறுதிப்பூண்டுள்ளது. நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் ஏராளமான நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் ஏராளமான நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தும் வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். கடந்த 2025ம் ஆண்டு 2,300 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் 630க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளனர். நக்சல் இயக்க முக்கிய தலைவர்கள் உள்பட பலர் சுட்டு கொல்லப்பட்டனர்.

நக்சல் பாதித்த பல மாநிலங்களில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நக்சல் பாதித்த பகுதிகளில் 2014ம் ஆண்டில் 66ஆக இருந்த காவல்நிலையங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 586ஆக அதிகரித்துள்ளன. 2013ம் ஆண்டில் 76 மாவட்டங்களில் 330 நக்சல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது 2025ல் 22 மாவட்டங்களில் 52 நக்சல் வழக்குள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன” என்றனர்.

இதற்கிடையே நக்சல் ஒழிப்பு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை யில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர். விவாதத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிப்பார்.

Tags : Naxals ,New Delhi ,Union government ,Naxal ,Chhattisgarh ,Jharkhand ,Madhya Pradesh ,Maharashtra ,Telangana ,Andhra Pradesh ,Odisha ,Naxalism.… ,
× RELATED காஷ்மீர் அணிக்கு மோடி பாராட்டு