×

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன: ஒருநாள் தேவைக்கு போதுமானது

புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மேலும் 2 எல்ஜிபி டேங்கர் கப்பல்கள் இந்தியா நோக்கி பயணித்து வருகின்றன. மேற்கு ஆசியா போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பாக பயணித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. பிடபிள்யு டிஒய்ஆர் மற்றும் பிடபிள்யு இஎல்எம் எனப்படும் 2 இந்திய கப்பல்களில் 94,000 டன் எல்பிஜி எரிவாயு கொண்டு வரப்படுகிறது.

இதில் பிடபிள்யு டிஒய்ஆர் கப்பல் நாளை (31ம் தேதி) மும்பையை வந்தடையும், பிடபிள்யு இஎல்எம் கப்பல் ஏப்ரல் 1ம் தேதி நியூ மங்களூருவை வந்தடையும். இதில் கொண்டு வரப்படும் எல்பிஜி, நாட்டின் ஒருநாள் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்கானது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட போது அங்கு மேற்கு பகுதியில் 24 இந்திய கப்பல்களும், கிழக்கு பகுதியில் 4 இந்திய கப்பல்களும் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இவற்றில் மேற்கு பகுதியிலிருந்து 6 கப்பல்களும் கிழக்கு பகுதியில் இருந்து 2 கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான இந்தியா வந்திருக்கிறது. இதற்கிடையே உள்நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேசமயம், எரிபொருள் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் பீதியுடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், எல்பிஜியிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவுக்கு மாறுவதை அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

Tags : Strait of Hormuz ,India ,New Delhi ,West Asia ,Iran ,
× RELATED காஷ்மீர் அணிக்கு மோடி பாராட்டு