நச்னு நாலு கேள்வி: திமுகவோட தில்லா நின்னு நேருக்குநேர் சண்டை போடாம கூட்டணி தலையில் கட்டிட்டாரு… எடப்பாடி ஒரு கோழை… திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

1. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் களம் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க? யாருக்குச் சாதகமா இருக்கு? களம் ரொம்ப அற்புதமா இருக்கு. திமுகவுக்கு ரொம்பச் சாதகமாக இருக்கு. தலைவர் தளபதி செய்த திட்டங்கள், அவர் செய்யும் நன்மைகளாலும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிற புதிய புதிய திட்டங்களுக்காகவும் களம் திமுகவுக்குச் சாதகமா இருக்கு. கூட்டணிக் கட்சிகளுடன் 4 முறை, 5 முறை பேசினாலும் காத்திருந்து, பொறுமையா, அன்போடுபேசி சீட்டைக் கொடுத்து, அவங்க கேட்கிற இடத்தில நெகோஷியேட் பண்ணி, எல்லோரையும் சந்தோஷமா அரவணைச்சுக்கொண்டு போறது களம் அருமையா இருக்கு.

2. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணிக்குச் சவால் கொடுக்கிற வகையில இருக்கும்னு நினைக்கிறீங்களா? அது உங்களுக்கே தெரியும். சவால் கொடுக்கிற மாதிரியா சீட் பிரிச்சதுல எப்படி நடந்ததுன்னு நீங்களே பார்த்தீங்க. பாஜவுக்கு கொடுத்திருக்கிற தொகுதி எப்படி, அமமுகவுக்குக் கொடுத்திருக்கிற தொகுதி எப்படி, அதிலும் குறிப்பா சொல்லணும்னா தமாகவுக்குக் கொடுத்த 5 தொகுதிகளும் பாருங்க எப்படிப் பிரிச்சுக்கொடுத்திருக்காங்கன்னு.

அதான் தன்னால ஜெயிக்க முடியாத இடத்தைக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்துவிட்டார். நம்பிக்கை துரோகத்துக்கு மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி. அவர் பண்ணுறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லைங்க. நம்ம நின்னு சண்டை போட்டுத் தோக்குறதுல அர்த்தம் இல்லைன்னு தள்ளி வர்றது ஒரு வீரனுக்கானது இல்லை. அந்த கோழைத்தனமான முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்காரு.

3. தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் குறித்து உங்களது கருத்து என்ன? இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்களா? வாய்ப்பே இல்லைங்க. கொஞ்சம் நஞ்ச இடத்துல இருந்த வாய்ப்பு கூட இடையில நடந்த சம்பவங்கள், அவங்க மனைவி அனுப்பின நோட்டீஸ், அதுக்கு அவர் பண்ணின ரிப்ளை. இதெல்லாம் தமிழ்நாடு கலாச்சாரத்துக்கு ஒத்துவராத சூழ்நிலை. அதனால இருந்த வாய்ப்பும் பறிபோயிருக்கே தவிர அவருக்கு வாய்ப்பு துளிகூட இல்லை. அரசியல் செயல்பாடுன்றது ஒன்னும் இல்லை. ‘கம்பெனி’ மாதிரிதான் நடத்துறாரு. செயல்பாடா இல்லை. மக்களைச் சந்திக்கிறதே இல்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை.

பொதுமக்களை நேரடியா எங்க சந்திச்சாரு? மக்களைச் சந்திச்சுப் பேசுறதுல கூட தள்ளி நில்லுங்கடான்னு சொன்னாரே தவிர, அது மாதிரி யாரையும் ஒழுங்குபடுத்தல. கலாச்சாரம் தெரியாத ஒரு தலைவர். கலாச்சாரத்துக்கு உதாரணம் சொல்லணும்னா தளபதியின் தொண்டர்கள் தான். அவரின் தொண்டர்களை அரசியல் படுத்தவே இல்லை. அவங்களை இன்னும் பக்குவப்படுத்தவே இல்லை. அவங்களைப் பக்குவப்படுத்திட்டாருன்னா, இவரைத் தூக்கி எறிஞ்சிருவாங்கன்றதுனால அவர் பண்ணுறதுக்குத் தயாரா இல்லை. அதை ஏத்துக்கத் தொண்டர்களும் தயாரா இல்லை.

4. தேர்தல் வந்ததும் தெருத்தெருவாகச் சென்று பிரசாரம் செய்வோம்னு சொன்னவர்கள் இப்போ தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தாலும், திமுக மேல அந்தப் பழியைச் சுமத்துறதை எப்படிப் பார்க்கிறீங்க? பின்னணி என்னன்னு நினைக்கிறீங்க? அவங்க சொல்ற ஒரே வார்த்தை எல்லாம் திமுக சதி. ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் சொன்னாரு, தேர்தல் நோட்டிபிகேஷன் வந்துட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து வேல்யூ இல்லாம போயிரும்னு. அப்ப தெருத்தெருவா வருவோம்னு சொன்னாங்க.

48 மணி நேரத்துக்கு முன்னாடிதான் அனுமதிக் கடிதம் கொடுக்கணும்னு பொது அறிவு கூட இல்லாம, புரிதல் இல்லாம இப்போ அவர் சொன்னாங்கல்ல அந்தப் பாரதி நகர்கிட்ட பள்ளம் போட்டுட்டாங்க கேட்டாங்கல்ல? அதை நானே நேரடியா போய் பார்த்தேன். அப்படி ஒண்ணுமே இல்லை. தேர்தல் கமிஷன் கேட்கிற கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லத் தெரியாம, எங்க மேல பழி சொல்றது அவ்வளவு நல்லது இல்லை. தேர்தல் ஆணையம் வாய் திறந்தாலே அது டெல்லிக்குப் போயிரும்ல? டெல்லிக்குப் போனா இவரு உள்ள போகணும்ல?. டெல்லிக்குப் பயந்துட்டுத்தான் தேர்தல் ஆணையத்து மேல குறை சொல்லவில்லை.

அவர் வந்து ஒரு 15 கோடி ரூபாய் சம்பாதிச்சுட்டாருன்னு இன்கம் டேக்ஸ்ல சொன்னது. கார் எடுத்துட்டு ஜிஎஸ்டி கட்டாதது. அந்த கரூர் சம்பவம் பார்த்தீங்கன்னா தமிழ்நாடு போலீஸ் விசாரிச்சு அந்த கேஸே முடிஞ்சிருக்கும். அதை கொண்டு போய் இவங்களா கோர்ட்ல போட்டு, அது டெல்லிக்கு வரைக்கும் போயி. தமிழக காவல்துறை இவங்களை எப்.ஐ.ஆர்-ல சேர்க்கவே இல்லை. பாஜ நினைச்சா ஒன்னும் இல்லாத விஷயத்தைப் பெருசாக்குறதும், பெருசாக்குற விஷயத்தை ஒன்னும் இல்லாம ஆக்குறதுமான கட்சியில போயிட்டு இவங்க மாட்டிக்கிட்டு முழிக்குறாங்க. அங்கதான் பயம் இருக்கு அவருக்கு.

Related Stories: