யாருக்கு சீட் தரணும்னு தலைமைக்கு தெரியும்…. அண்ணாமலைக்கு வானதி சூடு

கோவையில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கோவையில் இருந்தும் பிரதமரை வரவேற்க வரவில்லையே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த வானதி, ‘‘நான் ஏர்போர்ட் வந்தவுடன் அண்ணாமலை எப்பொழுது வருகிறார் என கேட்டேன். பிரதமரை வரவேற்கும் லிஸ்டில் அவரது பெயர் கொடுக்கப்பட்டிருந்தது.

அவர் தான் வரவில்லை என்ற தகவல் வந்தது. அது என்னவென்று கேட்கிறேன்’’ என்றார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ‘‘பாஜ ஒரு தேசிய கட்சி. எங்களது அமைச்சர் பியூஸ் கோயல் வெளிநாட்டில் இருந்து நாளை தான் வருகிறார். அவர் வந்தவுடன் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதன் பின்னர் டெல்லியில் இருந்து வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.

கூட்டணிக்கு எந்தத் தொகுதி வருகிறது, போகின்றது என எனக்கு தெரியாது. பாஜவில் தனித்தனி ஆதரவாளர் என்று இல்லை. அண்ணாமலையின் அன்பு கூட்டத்தில் நாங்களும் இருக்கிறோம். அவர் எங்கள் அன்புக்குரிய தம்பி. பாஜ தலைமை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னர் அவருக்கு சீட் கொடுக்கவில்லை.

இவருக்கு கொடுக்கவில்லை என சொல்ல முடியாது. யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்சி தலைமைக்கு தெரியும். கட்சியில் சாதாரணமாக ஒருவர் வந்து 5 ஆண்டு வேலை பார்த்தவர்களுக்கு ஒரு ஆசை இருக்கும். ஆனால் யாருக்கு எப்போது கொடுக்க வேண்டும். எந்த நிலையில் கொடுக்க வேண்டும். அவர்களால் வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பார்த்து கட்சி கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* விஜய்யை சீரியஸா எடுத்துக்காதீங்க
‘விஜய் இன்று தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார். 10 நாள் கழித்து அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை பார்க்கலாம். அவர்களின் தேர்தல், அரசியல் என்பது வேறு. அவர்களுக்கு இது முதல் தேர்தல். முதல் விஷயம் என்பதால் அதில் ஆர்வம் இருக்கலாம். அவர்கள் தலைவருக்கும் இருக்கலாம். விஜய்யின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். திமுகவிற்கு மாற்று தவெக என்பது தமிழ்நாட்டில் இல்லை. தவெக அரசியல் வேலைகளை கொஞ்சம் ஆர்வமாக நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்.

Related Stories: