நொய்டா: மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலால் எழும் சவால்களை இந்தியா முழு பலத்துடன் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஜேவரில் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நடைபெற்றது. சுமார் ரூ.11,200கோடி மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விமான நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுக்கு 7கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மாறும்.
முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் முதல் முனைய திறப்பு விழா நடைபெற்றது. பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில்,‘‘மேற்கு ஆசியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக மோதல் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த சவாலை இந்தியா முழு பலத்துடன் எதிர்கொண்டு வருகின்றது. மோதலால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா சார்ந்துள்ளது. உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு குடிமக்கள் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கும் குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் நலனை உறுதி செய்வதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விக்சித் பாரத் என்ற இலக்கை அடைவதற்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு 14லட்சம் குடிமக்களிடையே கூட்டு முயற்சியும் ஒற்றுமையும் தேவைப்படும். குடிமக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதின் மூலமும், செலவுகளை குறைப்பதன் மூலமும் அவர்களின் வசதியை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும்.
நொய்டா சர்வதேச விமான நிலையமானது ஒரு வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசம் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்த பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், சிறுவணிகர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்களை உருவாக்கும்” என்றார்.
