×

கர்ப்பிணிகளுக்கு அதிக வைட்டமின் பி12; குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு உதவும்: புதிய ஆய்வில் தகவல்

 

புதுடெல்லி: பிஎம்ஜே பீடியாட்ரிக்ஸ் ஓபன் என்ற இதழில் இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள 2 மையங்களில் நடந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் உள்ள சைவ உணவு பழக்கம் கொண்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவத்திற்குப் பிறகான 6 மாதங்கள் வரை, அவர்களில் ஒரு பகுதியினர் தினமும் அதிக அளவு வைட்டமின் பி12 (250 மைக்ரோகிராம்), மற்றொரு பகுதியினர் குறைந்த அளவு (50 மைக்ரோகிராம்) பெற்றனர்.

மொத்தம் 531 தாய்-குழந்தை ஜோடிகளில், அதிக அளவு மருந்தை எடுத்துக்கொண்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள், 9-12 மாத வயதில் செய்யப்பட்ட ஆரம்பகால மன வளர்ச்சி மதிப்பீடுகளில் கணிசமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றனர். அதே சமயம், இயக்க வளர்ச்சி இரு குழுக்களுக்கும் இடையில் ஒரே மாதிரியாக இருந்தது என்று இந்த ஆய்வை வழிநடத்திய டெல்லி சீதாராம் பாரதிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜிதேந்தர் நாக்பால் கூறினார்.

ஆய்வு முடிவு குறித்து அவர் கூறியதாவது:
சைவ உணவுப் பழக்கம் கொண்ட தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி12 உட்கொள்ளலை அதிகரிப்பது குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். அதே நேரத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் வைட்டமின் பி12 குறைபாட்டை கணிசமாக குறைக்கும் என்பதற்கு இந்த ஆய்வு முடிவுகள் வலுவான சான்றுகளை வழங்குகின்றன. தெற்காசிய பெண்களில் வைட்டமின் பி12 குறைபாடு பெரும்பாலானவர்களை பாதிப்படுகின்றனர். வழக்கமான மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பில் வைட்டமின் பி12 பற்றி சரியாகக் கவனம் செலுத்தப்படவில்லை.

இது பெரும்பாலும் இரும்பு மற்றும் போலிக் ஆசிட்டில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் வழக்கமான வைட்டமின் பி12 சப்ளிமெண்ட் வழங்குதல் தற்போது அரசின் மகப்பேறுக்கு முந்தைய வழிகாட்டுதல்கள் அல்லது நிபுணர் குழுக்களின் பரிந்துரைகளில் சேர்க்கப்படவில்லை. இதன் விளைவாக, பல பெண்கள் கண்டறியப்படாத மற்றும் சிகிச்சையளிக்கப்படாத பி12 குறைபாட்டுடன் கர்ப்ப காலத்தில் நுழைகிறார்கள் . இது பிறக்கும் குழந்தையின் ஆரம்பகால மூளை வளர்ச்சி தாயின் ஊட்டச்சத்தை மிகவும் சார்ந்து இருக்கும் ஒரு காலகட்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : New Delhi ,India ,Nepal ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...