×

கேரளாவில் ரூ.700 கோடி ஊழலா?.. பரபரப்பு தகவல்கள்

 

பாலக்காடு: கேரளாவில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய முறையின் கீழ் ரத்து செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்தத் துறையில் எவ்வித முன்அனுபவமும் இல்லாத கண்ணூரைச் சேர்ந்த தினேஷ் பீடி கூட்டுறவு சங்கத்திற்கு புதிய ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதலா குற்றம் சாட்டினார். 4,400-க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு மென்பொருள் வழங்கும் பணிக்கு, டிசிஎஸ் நிறுவனம் முன்னதாகக் குறிப்பிட்டிருந்த ரூ.206 கோடியுடன் ஒப்பிடுகையில், தற்போது சுமார் ரூ.915 கோடி செலவாகும். இதன் விளைவாக அரசு கருவூலத்திற்கு சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை முதல்வர் பினராயி விஜயன் மறுத்தார். அவர் கூறுகையில்,’ கேரளாவில் உள்ள 4,415 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு மென்பொருள் கொள்முதல் செய்வதில் ரூ. 700 கோடி ஊழல் நடந்ததாக சென்னிதாலா சுமத்தியது தவறான குற்றச்சாட்டு. அந்த கொள்முதல் செயல்முறை மிகவும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கேரள உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் அளித்தது. எனவே அந்தக் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது; வெறுமனே ஒரு குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அது முன்வைக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ரூ. 206 கோடி மதிப்பில் அப்பணியை மேற்கொள்வதற்கான பணி மேற்கொள்ளும் விருப்பக் கடிதம் டிசிஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், 2024-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் தன்னிச்சையாக அந்தப் பணியிலிருந்து விலகிக்கொண்டது. எனவே, 2025ஆம் ஆண்டில் புதிய ஒப்பந்தப்புள்ளியைக் கோருவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வெற்றிகரமான ஒரு ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை வெற்றிபெற்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கு கேரள உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது’ என்றார்.

Tags : Kerala ,Palakkad ,Congress ,TCS ,Dinesh Beedi Cooperative Society ,Kannur ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...