கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் வாக்காளர் எண்ணிக்கை எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 7.04 கோடியாக குறைந்தது. இதில் 60 லட்சம் வாக்காளர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பல்வேறு மாநில நீதிபதிகள் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். வாக்காளர்களும் இதுபற்றி புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மேற்குவங்கத்தில் வாக்காளர் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,’ வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டவர்கள், தீர்ப்பாயங்களை அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பாயங்கள் எப்போது, எங்கு செயல்படத் தொடங்கும் என்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. மேற்கு வங்க அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்ப்பாயங்களுக்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இனி, உயர் நீதிமன்றம் இது குறித்து முடிவெடுக்கும்.
உயர் நீதிமன்றத்தின் முடிவுக்குப் பிறகு, வாக்காளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகத் தீர்ப்பாயங்கள் செயல்படத் தொடங்கும். இதற்கு தேவையான மென்பொருள் தயாராக உள்ளது. இந்த வாரத்திற்குள்ளோ அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்திலோ பயன்பாட்டிற்கு வரும்’ என்றார்.
