*போக்குவரத்து கடும் பாதிப்பு
ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரி அருகே தெருவில் குடிநீர் குழாய்களை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து – கனகா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கனகாவும் மாரிமுத்துவும் மாற்றுச் சமுகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனகாவின் உறவினர்கள் கக்கன்ஜி நகர் பகுதியில் வந்து தகராறு செய்து குடிநீர் குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த சாரதா என்பவர் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
குழாய் உடைப்பால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 4 தினங்களுக்கு மேலாக குடிநீர் வராமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று இரவு நெல்லை – திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாய்களை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் வீராச்சாமி மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நெல்லை – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
