மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி பெயர் நீக்கம்: மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடிவு

 

கொல்கத்தா: வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயர் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 13 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த குளறுபடிகள் குறித்து விசாரிக்க மாநிலம் முழுவதும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 19 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நிலவும் நம்பிக்கையின்மை காரணமாக, இந்தப் பணியை நிர்வாக அதிகாரிகளுக்குப் பதிலாக, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளே மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 23-ம் தேதி, நடைபெற்ற ஆய்வின் முடிவில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சாகிதுல்லா முன்ஷி (68) என்பவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டது.

தற்போது மேற்கு வங்க மாநில வக்பு வாரியத் தலைவராகப் பணியாற்றி வரும் சாகிதுல்லா முன்ஷி, தனது பெயர் நீக்கப்பட்டது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது வசிப்பிடத்தை போபஜாரில் இருந்து என்டலி பகுதிக்கு மாற்றியிருந்தார். புதிய முகவரிக்கு வாக்காளர் அட்டையை மாற்ற பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்த நிலையிலும், அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் அவமானகரமானது மற்றும் மனவேதனை அளிக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் போதே கொலிஜியம் மற்றும் ஜனாதிபதியால் எனது குடியுரிமை மற்றும் அடையாளம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, எந்தவித அடிப்படை ஆய்வும் இன்றி இயந்திரத்தனமாக எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நீக்கத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணங்கள் கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க உள்ளேன்’ என்று தெரிவித்தார். நீதிபதி சாகிதுல்லா முன்ஷியின் பெயர் நீக்கப்பட்டாலும், அவரது மனைவி மற்றும் மூத்த மகனின் பெயர் குறித்த விவரங்கள் இன்னும் பரிசீலனையிலேயே உள்ளன. அவரது இளைய மகன் புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: