காதலுக்கு தடையாக இருந்ததால் வெறிச்செயல் தாயை கழுத்து நெரித்துக்கொன்று படுக்கையறையில் புதைத்த மகள்

*10 மாதங்களுக்கு பிறகு காதலனுடன் கைது

திருமலை : தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர்நகர் கவுகூர் பாரத்நகரில் வசித்து வருபவர் அஞ்சு. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அஞ்சு, பல ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென அஞ்சு மாயமானார்.

அவரை காணாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இருப்பினும் தகவல் இல்லை. இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அஞ்சுவை தேடிவந்தனர். இதனிடையே போலீசார் பல கோணங்களில் அஞ்சுவின் 2 மகள்களிடம் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அஞ்சுவின் 2வது மகளான இஷிகா என்பவர் அதேபகுதியை சேர்ந்த மவுன்டியராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த அஞ்சு, மகளை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனது வீட்டுக்கும் மவுன்டியராஜை, மகள் அழைத்து வந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் எனது தாயை தீர்த்துக்கட்டினால் நாம் இருவரும் நிம்மதியாக வாழ முடியும் என இஷிகா தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி இருவரும் சேர்ந்து அஞ்சுவை கழுத்து நெரித்துக்கொலை செய்துள்ளனர். சடலத்தை வெளியே கொண்டுசென்றால் சிக்கல் எனக்கருதி வீட்டில் படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் பள்ளம் தோண்டி புதைத்தது தெரியவந்தது.

இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த அஞ்சுவின் உடலை வெளியே எடுத்தனர். இதையடுத்து மகள் இஷிகா மற்றும் மவுன்டியராஜை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: