ஓசூர், மார்ச் 27: ஓசூர் வாகன நெரிசல் அதிகமாக உள்ள பாகலூர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதனை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எருமைகள், பசுக்கள், நாய்கள் பிரதான சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களுக்கு குறுக்கே மாடுகள் வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஓசூர்- பாகலூர் சாலையில் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதுடன், சாலையின் நடுவில் படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதால், அடிக்கடி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இவற்றை தடுக்கும் விதமாக, கால்நடைகளை வீட்டில் கட்டி வளர்க்காமல் சாலையில் சுற்றி திரியவிடும் அவற்றின் உரிமையாளர்கள் மீது, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையும், அபராதமும் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
