2011ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை 50% உயர்த்தி புதிய சட்டத் திருத்தம்: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு

புதுடெல்லி: கடந்த 2011ம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு லோக்சபா இடங்களை 816 ஆக உயர்த்தி அதில் 273 இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுவரையறை செய்வதற்கு கடந்த 1976ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்கி, பெண்களுக்கு அரசியல் அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு 106வது அரசியல் சாசன திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று லோக்சபா இடங்களை 816 ஆக உயர்த்துவதற்கான நீண்டகால திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு 273 இடங்களை ஒதுக்கீடு செய்து, அரசியல் களத்தில் நிலவும் பாலின சமமின்மை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசியல் சாசனத்தின் 334ஏ பிரிவில் திருத்தம் செய்யப்பட உள்ளது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போயுள்ள நிலையில், 2011ம் ஆண்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்களைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், 50 சதவீதம் மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமாகும். இதனால் இதர கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்கும்போது, மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்க, அனைத்து மாநிலங்களின் தொகுதிகளையும் 50 சதவீதம் வரை உயர்த்தும் முறையை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. இதன்படி உத்தரப் பிரதேசத்தில் தொகுதிகள் 80 என்பதிலிருந்து 120 ஆகவும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 என்பதிலிருந்து 72 ஆகவும், தமிழ்நாட்டில் 39 என்பதிலிருந்து 59 ஆகவும் அதிகரிக்கும்.

இந்த புதிய முறையினால் தற்போது பதவியில் உள்ள ஆண் உறுப்பினர்களின் வாய்ப்புகள் பறிபோகாமல் பாதுகாக்கப்படும். மொத்தமுள்ள 816 இடங்களில் 273 இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டாலும், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்பதால் அரசியல் ரீதியான மோதல்கள் தவிர்க்கப்படும். மேலும், இந்த 273 இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, விளிம்புநிலை மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வழிவகை செய்யப்படும். நிர்வாக ரீதியாகப் பார்க்கும்போது, ஒரு தொகுதி உறுப்பினர் கவனிக்கும் மக்களின் எண்ணிக்கை 25 லட்சத்திலிருந்து 15 லட்சமாகக் குறையும். இதனால் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எளிதாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘மக்களின் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்யவும் சிறந்த நிர்வாகத்திற்கும் இந்த எண்ணிக்கை உயர்வு மிகவும் அவசியமானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த திட்டத்திற்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உரிய உள் ஒதுக்கீடு இல்லாமல் 273 இடங்களை ஒதுக்கினால், அது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மேலும், அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களே இந்த இடங்களை ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் விவாதங்களின் தரம் குறையக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த விரிவாக்கத் திட்டத்தினால் எம்பிக்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும். இந்த நடைமுறை சிக்கல்களைக் களைந்து, வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, ஒரு சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டி இந்த சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

Related Stories: