சென்னை, மார்ச் 21: சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பறக்கும் படையினருடன் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், தேர்தல் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி, தேர்தல் செலவின பார்வையாளர் பவன் லால் மீனா தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி முன்னிலையில், காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று தேனாம்பேட்டை மண்டல அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் துணை ஆணையர்கள், உதவி காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள் குழு, கணக்கு குழு, வீடியோ பதிவு செய்யும் குழு மற்றும் இதர தேர்தல் பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுடன் தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் பின்பற்றி பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் உரிய ஆலோசனைகளை வழங்கினார். ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள், தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் மற்றும் புகார்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் பவன் லால் மீனாவிடம், 89258 19472 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாடிகளை தேர்தல் பொது பார்வையாளர் தேம்ஜென்வாபாங் ஆவோ தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
* அம்பத்தூர் மற்றும் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தேர்தல் அதிகாரி பிரபாகரன் தலைமை வகித்தார். தேர்தல் உதவி அதிகாரி டாலி, அம்பத்தூர் காவல் உதவி ஆணையர்கள் ஜாண்டி, ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அம்பத்தூர், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பொது பார்வையாளர் சுமன்குமார் கலந்து கொண்டு தேர்தல் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ந்த செலவுகள், வேட்பாளர்கள் மூலம் வழங்கப்படும் விளம்பரங்கள், பிரசாரத்தின்போது வரும் பொதுமக்களுக்கான செலவுகளை கணக்கிடுவது குறித்து தேர்தல் பணி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கவுஷிக் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழிப்புணர்வு: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடசாலை தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தேசிய மாணவர் படை, நாட்டு நலத் திட்டப் பணி மாணவர்கள் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சக்கொல்லை தெருவில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேர்தல் நாள் குறித்த ரங்கோலி கோலமிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மனித சங்கிலி மூலம் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, வாக்காளர்களுக்கு 100% வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
