×

பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவணம் இல்லாத ரூ.13.94 லட்சம் பறிமுதல்

சென்னை, மார்ச் 24: சென்னையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.94‬ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் திவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி பொதுமக்கள் கொண்டு செல்லும் பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஆந்திர மாநில வாலிபரின் பையை சோதனை செய்தபோது, ரூ.7.20 லட்சம் ரொக்கம் இருந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தில் உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் ரூ.7.20 லட்சத்தை பறிமுதல் செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிரஞ்சன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.82,140 சிக்கியது. விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்வஜித் பட்ரா (39) என்பதும், முகப்பேரில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 திருவொற்றியூர் டோல்கேட் பஸ் நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 925 கொண்டு சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், திருவொற்றியூர் தனியார் பள்ளியில் பீஸ் கட்டிய பணத்தை வங்கியில் செலுத்த சென்றது தெரியவந்தது. அதற்கான அவணங்கள் இல்லாத நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பொன்னேரி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 வளசரவாக்கம் ஆற்காடு சாலை கனரா வங்கி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். இதில் காரில் வந்த தனியார் நிறுவன ஊழியர் நரேஷ் கவுஷிக் (33), வைத்திருந்த பையில் உரிய ஆவணமின்றி ரூ.4.23 லட்சம் ரொக்கம் இருந்தது. அதை பறிமுதல் செய்து, பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Flying squad ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ரிப்பன் மாளிகை வளாகத்தில் செயல்படும்...