வர்த்தக காஸ் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகளுக்கு ஏப்.1 முதல் கட்டுப்பாடு: ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் உயரும், மக்களுக்கு மேலும் சுமை கூடும்

மும்பை: ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளிடையேயான போர் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள காஸ் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், வங்கி ஏடிஎம்களில் கார்டு மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஒன்றிய பாஜ அரசின் முடிவுகளாலும், செயல்பாடுகளாலும் ஏற்பட்டுள்ள காஸ் தட்டுப்பாட்டால் ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்புக்கு மத்தியில், தற்போது வங்கி ஏடிஎம் சேவை கட்டணம் அப்பாவி மக்களுக்கு புதிய நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள் பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. இதில் மக்களால் அன்றாடம் அதிகம் பயன்படுத்தப்படும் ஏடிஎம் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்களில் பெருநகரங்களாக இருந்தால் 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம். பிற நகரங்களில் அல்லது புறநகர்களில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்களில் 5 முறையும், பிற ஏடிஎம்களில் 5 முறையும் கட்டணம் இன்றி பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வங்கிக் கணக்கில் இருப்பு சரிபார்ப்பு, பின் நம்பர் மாற்றம் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது போன்றவையும் இந்த பரிவர்த்தனைகளில் அடங்கும்.

இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புக்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணமாக ரூ.21 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இலவச வரம்புக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி ஆகியவை பெருநகரங்களாக கருதப்படும்.

வங்கிச் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி பல்வேறு முக்கிய வங்கிகள் புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன. அதன்படி எச்டிஎப்சி வங்கியில் இனிமேல் செல்போன் மூலம் மேற்கொள்ளப்படும் ‘யுபிஐ’ அடிப்படையிலான கார்டு இல்லாத பணப் பரிவர்த்தனைகளும், மாதந்திர 5 இலவச பரிவர்த்தனை கணக்கிலேயே சேர்க்கப்படும். இந்த வரம்பைத் தாண்டினால், ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் 23 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும் என இந்த வங்கி அறிவித்துள்ளது.

இதுபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி, குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கு ஏடிஎம்மில் தினசரி பணம் எடுப்பதற்கான வரம்பில் மாற்றம் செய்துள்ளது. அதாவது , ரூபே என்சிஎம்சி பிளாட்டினம் டெபிட் கார்டு, பெண்களுக்கான ரூபே உமன் பவர் பிளாட்டினம் டெபிட்கார்டு, மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் ரூபே பிஎன்பி பிலாஷ் டெபிட்கார்டு, ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்சிஎம்சி டெபிட் கார்டு, மாஸ்டர் கார்டு பிளாட்டினம் டெபிட்கார்டு, விசா கோல்டு டெபிட் கார்டு மற்றும் பிஎன்பி மாஸ்டர் கார்டு பிளாட்டினம் ரைஸ் ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு ஏடிஎம்களில் எடுக்கும் பண வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரூபே செலக்ட் டெபிட்கார்டு, பிஎன்பி ரூபே செலக்ட் நியோ, பிஎன்பி ரூபே செலக்ட் எக்ஸல், விசா சிக்னேச்சர் டெபிட் கார்டு மற்றும் மாஸ்டர் கார்டு பிசினஸ் டெபிட் கார்டு ஆகியவற்றுக்கு நாள் ஒன்றுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான வரம்பு 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பந்தன் வங்கியும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பந்தன் வங்கியில் அதன் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவச பரவர்த்தனை மேற்கொள்ளலாம். அற்கு மேல் கட்டணம் உண்டு.

அதேநேரத்தில், நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு வரம்பு இல்லை என தெரிவித்துள்ளது. இதர வங்கி ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை வரம்பு பெருநகரங்களில் 3 ஆகவும், புறநகர்களில் 5 ஆகவும் தொடர்கிறது. இதர வங்கி ஏடிஎம்களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் உண்டு என இந்த வங்கி தெரிவித்துள்ளது. நிதி சார்ந்த பரிவர்த்தனைக்கு ரூ.23, நிதி சாராதவற்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படும். கணக்கில் போதிய பணம் இல்லாத காரணத்தால் ஏடிஎம் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டால், 25 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என்ற புதிய விதியையும் இந்த வங்கி கொண்டு வந்துள்ளது.

முன்பு டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு வந்தது. தற்போது யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யுபிஐ மூலம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் வசதியை ஜியோ பேமன்ட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதுபோல் பல வங்கிகள் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளன.

எனவே வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையில் கவனமாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் பலர் அவ்வப்போது செலவுக்கு ஏற்ப ஏடிஎம்களில் பணம் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு அவர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையிலும் ஒன்றிய அரசின் உத்தரவால் ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டது.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலரை எப்போதோ தாண்டி விட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. எனினும், தேர்தல் என்பதால் இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்த பிறகு திடீரென பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. வளைகுடா போர் காரணமாக வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக உணவுப்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் உத்தரவின்பேரில் ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை மற்றும் சேவைகள் மீது வங்கிகள் ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

* முதியவர்கள் சிறு வியாபாரிகளுக்கு அதிகம் பாதிப்பு

* தேவைக்கேற்ப அவ்வப்போது சிறிய அளவில் பணம் எடுக்கும் மக்கள் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள்.

* மூத்த குடிமகன்கள் பலர் யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில்லை. ரொக்கமாக பயன்படுத்துவதையே விரும்புகிறார்கள். முதியோர் பலர் பாதுகாப்பு கருதி மொத்தமாக எடுத்து வைப்பதில்லை. இவர்களும் கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்றனர்.

* பெட்டிக்கடை, தள்ளுவண்டி போன்ற சிறு வியாபாரிகள் பலர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சில்லறை தட்டுப்பாடு காரணமாக யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் பெறுகின்றனர். அன்றாடம் வியாபாரம் முடிந்ததும் ஏடிஎம்மில் தான் பணம் எடுக்கின்றனர். இவர்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்பட கூடியவர்கள். ஏடிஎம் பரிவர்த்தனை மட்டுமின்றி யுபிஐ பயன்படுத்துவதற்காகவும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது.

Related Stories: