×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் வரும் 30ம் தேதி தொடக்கம்: 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் வரும் 30ம் தேதி தொடங்க உள்ளதால் பல்வேறு சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3 நாட்களுக்கு வசந்த உற்சவம் நடப்பது வழக்கம். 3ம் நாளில் பங்குனி மாத பவுர்ணமியன்று நிறைவுபெறும். அதன்படி வரும் 30ம் தேதி காலை 6.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கு வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், நைவேத்தியம் நடக்கும். பின்னர் சுவாமி மீண்டும் கோயிலை வந்தடைவார். 2வது நாளான வரும் 31ம் தேதி தேவி பூதேவி சமேத மலையப்பசுவாமிகள் காலை 8 முதல் 10 மணி வரை தங்க ரதத்தில் திருமாட வீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தை அடைவர். அங்கு அன்று மதியம் வசந்த உற்சவம் நடைபெறும்.

கடைசிநாளான ஏப்ரல் 1ம் தேதி தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி,  சீதா, ராமர் லட்சுமணர், ஆஞ்சநேயசுவாமி உற்சவர்கள், ருக்மணி சமேத கிருஷ்ணர் உற்சவர்கள் வசந்த உற்சவத்தில் பங்கேற்று மீண்டும் கோயிலுக்கு சென்றடைவர். இந்த நிகழ்வில் ஒவ்வொரு நாளும் மதியம் 2 முதல் 4 மணி வரை சுவாமி, சுவாமி தாயார்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனத்துடன் அபிஷேகம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் மாலை 6 முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறும். கோடைக்காலத்தில் வரும் வசந்த காலத்தில் நடைபெறும் உற்சவம் என்பதால் இந்த உற்சவத்திற்கு ‘வசந்த உற்சவம்’ என அழைப்பர். வசந்த உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, 31ம் தேதி அஷ்டதளபாத பத்மாராதனை சேவையை ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

Tags : Annual Vasantha Utsavam ,Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Vasantha Utsavam ,annual ,Panguni ,
× RELATED அசாமில் 2 காங்கிரஸ் இடையே போட்டி: மாநில தலைவர் கவுரவ் கோகாய் பேட்டி