- அசாம்
- காங்கிரஸ்
- நிலை
- ஜனாதிபதி
- கௌரவ் கோகோய்
- குவஹாத்தி
- அசாம் சட்டசபை
- தருண் கோகோய்
- ஹிமந்தா பிஸ்வா சர்மா
கவுகாத்தி: அசாம் சட்டசபை தேர்தல் என்பது தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸுக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான காங்கிரசுக்கும் இடையிலானப் போர் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார். அசாமில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் அமைச்சர்களாகவும், செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும் இருந்த பலர், பின்னர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
குறிப்பாக, தற்போதைய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தார். தற்போது அங்கு பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், மஜூலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரநீல் பேகுவை ஆதரித்து மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் பேசுகையில், ‘இப்போது நமக்கு முன்னால் இருப்பது ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே; அது பாஜக என்ற லேபிளைச் சுமந்து நிற்கிறது.
தருண் கோகோய் ஆட்சிக் காலத்தில் தவறு செய்த தலைவர்கள் அனைவரும் இப்போது பாஜகவில் இருக்கிறார்கள். எனவே, இந்தத் தேர்தல் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸுக்கும், ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான காங்கிரஸுக்கும் இடையிலானப் போட்டியாகும். தற்போது அசாமில் உண்மையான பாஜக என்று எதுவும் இல்லை. வாஜ்பாய் பவனில் குவிந்திருக்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் குடும்ப நலனுக்காகத் தேர்தலில் போட்டியிடத் துடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் தருண் கோகோய்யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட புதிய முகங்களைக் கொண்ட காங்கிரசாக நிற்கிறோம்’ என்றார். மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டசபைக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
