×

பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசாம் காவல்துறை முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்: 4 காவலர்கள் காயம்

 

டின்சுகியா: அசாமில் காவல்துறை முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் 4 பேர் காயமடைந்தனர். அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள அசாம் காவல்துறை கமாண்டோ முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவலர்கள் 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அதிகாலை 2.30 மணிக்கு டின்சுகியா மாவட்டத்தின் ஜகுன் பகுதியில் உள்ள காவல்துறை முகாம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 5 குண்டுகள் வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு உல்ஃபா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புக்கு எதிராக அசாம் காவல்துறை எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளுக்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் புஜோனி நடவடிக்கையின்கீழ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய 7 பேர் அடங்கிய கும்பல் அருணாச்சலபிரதேச எல்லை வழியாக தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது” என்றார். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது” என்றார்.

 

Tags : ULFA ,Assam ,assembly ,Tinsukia ,
× RELATED அசாமில் 2 காங்கிரஸ் இடையே போட்டி: மாநில தலைவர் கவுரவ் கோகாய் பேட்டி