×

எல்என்ஜி விநியோக தடையால் யூரியா உர உற்பத்தி பாதியாக குறைந்தது: தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 

புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் போர் காரணமாக திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகம் தடைப்பட்டிருப்பதால், யூரியா உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. இதனால் காரீப் பருவத்தில் உர பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. மேற்கு ஆசியாவில் போர் காரணமாக திரவ இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி இயற்கை எரிவாயுவை விநியோகிக்க முடியாது என வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்கள் கைவிரித்துள்ளன. இதனால் இந்தியாவில் உர ஆலைகளுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ளன. எரிவாயு விநியோகம் இயல்பான அளவை விட 60 முதல் 65 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, யூரியா உர ஆலைகள் தங்கள் உற்பத்தி திறனில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. உற்பத்தியும் 50 சதவீதம் குறைந்துள்ளது. வரவிருக்கும் காரீப் பருவத்திற்கு முன்பாக உர உற்பத்தி கணிசமாக குறைந்திருப்பதால் உள்நாட்டு விநியோகத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச் 19ம் தேதி நிலவரப்படி இந்தியா 61.46 லட்சம் டன் யூரியா கையிருப்புடன் உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை (55.22 லட்சம் டன்) விட அதிகம். ஆனால் உற்பத்தி குறைவு பெரும் கவலையை அளிப்பதாகவும், ஆலைகள் குறைந்த அளவில் இயங்குவதால் உபகரணங்கள் செயலிழப்பு, பணியாளர்களின் பாதுகாப்பில் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Tags : New Delhi ,West Asia ,Kharif ,West Asia… ,
× RELATED அசாமில் 2 காங்கிரஸ் இடையே போட்டி: மாநில தலைவர் கவுரவ் கோகாய் பேட்டி