*போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல்
உடன்குடி : உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதியில் பள்ளி சீருடையில் ஆபத்தான முறையில் பைக்கில் பயணத்தில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. இளங்கன்று பயமறியாது என்ற கூற்றின் அடிப்படையில் சிறார்கள் பைக்கில் சாகசத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
இதேபோல் கடந்த சில நாட்களாக உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் 5 பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். பள்ளிக்கு செல்லும் போது மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் 4 பேர் அமர்ந்தும், அருகில் சைக்கிளில் வந்த ஒரு மாணவனை கைப்பிடித்தும் இழுத்துச் செல்கின்றனர்.
இதனை பின்னால் காரில் வந்தவர், செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது. ஆபத்தான முறையில் விதிமுறைகளை மீறி பள்ளி மாணவர்கள் செய்த இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், உடன்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களும், சிறார்களும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் செயல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் வார விடுமுறை நாட்களில் உடன்குடி மெய்யூர் சாலை, குலசேகரன்பட்டினம் சாலைகளில் பைக் ரேசும் நடந்து வருகிறது.
இதில் அப்பாவிகள் விபத்தில் சிக்க கூடிய நிலையுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரீல்ஸ் மோகத்தில் மாணவர்கள்
கடந்த ஜனவரி மாத இறுதியில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் சொகுசு காரில் அதிகாலை வேளையில் உடன்குடி- குலசேகரன்பட்டினம் சாலையில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சாலையோரமிருந்த மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சொகுசு கார் என்பதால் காரில் ஏர்பேக் அனைத்தும் வெளியேறியதால் நல்வாய்ப்பாக மாணவர்கள் உயிர் தப்பினர். எனவே இது போன்ற விபரீத சம்பவங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
