சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என்று டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களான நிலையில் அதிமுக-பாஜக இடையிலான தொகுதி பங்கீடு முடிவு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்காக நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் நேற்று காலை செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி: அமித்ஷா தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களை கவனித்து வருவதால் அவரை டெல்லி வந்து சந்தித்துள்ளேன். இனி தேர்தல் முடியும் வரை தமிழ்நாட்டில் வேலை உள்ளதால் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான்.
மேலும் தொகுதி பங்கீடு குறித்து நான்கு நாட்களுக்குள் முடிவு செய்யப்படும். பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழ்நாடு இன்று வர உள்ளார். கூட்டணி ஓரளவுக்கு முடிந்து விட்டது. தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் நாங்களோ அல்லது அவர்களோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதனை ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், நானும் தெளிவாக தெரிவித்து விட்டோம். தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. எனவே நாங்கள் சொல்கிறோம் தமிழக வெற்றி கழகத்துடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எந்த குழப்பமோ சிக்கலோ இல்லை. மேலும் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து தொகுதி பங்கீடு நடைபெறும்.
சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரது பேச்சைப் பொறுத்தவரை ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறாக பேசிய ஒன்றுக்கு மன்னிப்பு கேட்ட பிறகு அதனைப் பற்றி விவாதிப்பது தவறாகிவிடும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அடுத்த ஒரு சில தினங்களில் வெளியிடப்படும். அதேபோன்று ஒரு வாரத்தில் அனைத்தும் நல்ல விதமாக முடிந்துவிடும் என்றார். இதையடுத்து அவர் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
