×

தேர்தல் படை சாகச பயணம்: மிரள வைக்கும் ‘வின்ச்’டிராவல்

 

இந்தியத் தேர்தல் வரலாற்றில் சில வாக்குச்சாவடிகள் வெறும் எண்கள் அல்ல; அவை அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கும், ஜனநாயகத்தின் பிடிவாதத்திற்கும் சான்றாக அமைகின்றன. அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியின் உச்சியில் அமைந்துள்ள ‘அப்பர் கோதையாறு’ (வாக்குச்சாவடி எண்: 201) இம்முறையும் வியப்பின் உச்சமாக மாறியுள்ளது.

பத்மநாபபுரம் (232) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் வெறும் 6 பேர் மட்டுமே. ‘வெறும் 6 பேருக்காக இவ்வளவு மெனக்கெடலா?’ என்ற கேள்வி எழலாம். ஆனால், ‘ஒவ்வொரு வாக்கும் ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்’ என்ற தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரம் இங்கு தான் நிஜமாகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,800 அடி உயரத்தில், மேகங்கள் முத்தமிடும் மலைச்சிகரத்தில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இங்குள்ள நீர்மின் நிலைய ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினருமே அந்த ‘விஐபி’ வாக்காளர்கள்.

இந்த வாக்குச்சாவடியின் புவியியல் அமைப்பு மிகவும் விசித்திரமானது. இது கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் இருந்தாலும், அங்கிருந்து நேரடியாகச் சாலை வசதி கிடையாது. இதனால் அதிகாரிகள் மேற்கொள்ளும் பயணம் ஒரு ‘மினி சுற்றுலா’ போன்றது. ஆனால் சவால்கள் நிறைந்தது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ள பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகர்கோவிலில் வழியாக புறப்படும் அதிகாரிகள், முதலில் அண்டை மாவட்டமான திருநெல்வேலிக்குள் நுழைகின்றனர்.

அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, குதிரைவெட்டி எனப் பயணம் நீள்கிறது. இது சாதாரணச் சாலை அல்ல. அடர்ந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், வனத்துறையின் பலத்த பாதுகாப்புடன் இந்தப் பயணம் தொடர்கிறது.

சாலையே இல்லாத இடத்திற்கு எப்படிப் போவது? அங்குதான் வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழுவை வண்டி. குதிரைவெட்டி வரை வாகனத்தில் சென்ற பிறகு, அங்கிருந்து செங்குத்தான மலைப்பகுதியை எட்ட அதிகாரிகள் இந்த வின்ச் வண்டியில் ஏறுகிறார்கள். இரும்பு வடக்கயிறு மூலம் அந்தரத்தில் தொங்கியபடி, அடியில் பாதாளமும் மேலே மேகங்களும் தெரிய, வாக்குப்பதிவு இயந்திரங்களை மடியில் அணைத்தபடி அதிகாரிகள் பயணிக்கும் காட்சி காண்போரைக் கதிகலங்கச் செய்யும்.

‘கடும் குளிரும், எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடிய காலநிலையும் எங்களைப் பின்தொடரும். ஆனால், அந்த 6 பேரின் விரலில் மை வைக்கும் போது கிடைக்கும் திருப்தி தனித்துவமானது,’ என்கிறார்கள் இப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள். வனவிலங்கு அச்சுறுத்தல், உறையவைக்கும் குளிர், செங்குத்தான மலைப்பாதை என அத்தனை தடைகளையும் தாண்டி தேர்தல் அதிகாரிகள் அங்கு செல்வது, இந்தியாவின் தேர்தல் கட்டமைப்பு எவ்வளவு வலுவானது என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தின் மிக உயரமான இடத்தில், மிகக் குறைந்த வாக்காளர்களுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்தல் திருவிழா, ‘ஜனநாயகத்தின் சிகரம்’ என்று அழைக்கப்படுவது மிகையல்ல.

Tags : Upper Kodaiyaru ,Polling Station No. 201 ,Kanyakumari district ,
× RELATED சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி...