ஆக்லாந்து: தென் ஆப்ரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நேற்று, நியூசிலாந்து மகளிர், 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தனர். தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியினர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகின்றனர். ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்த நிலையில், 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதையடுத்து அந்த அணியின் ஸூன் லூஸ், தஸ்மின் பிரிட்ஸ் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். தஸ்மின் ரன் எடுக்காமலும், சூன் லூஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். அதன் பின் கேப்டன் லாரா உல்வார்ட், அனெரி டெர்க்ஸன் இணை சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த இணை 3வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில், டெர்க்சன் 27 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்த க்ளோ டிரையன் 15, நாடினி டிகிளார்க் 8 ரன்னில் அவுட்டாகினர். அதுவரை நிலைத்து ஆடிக்கொண்டிருந்த உல்வார்ட் 37 ரன்னில் 6வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 18வது ஓவரில் சினாலோ ஜாப்டா 4 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன் மட்டுமே எடுத்தது.
அதையடுத்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து மகளிர் களமிறங்கினர். அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் இஸபெல்லா கேஸ் 17, ஜார்ஜியா பிளிமர் 4 ரன்னில் விக்கெட்டுகளை இழந்தனர். பின் வந்த கேப்டன் ஜார்ஜியா கெர் 30 ரன் எடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த சோபி டிவைன் அட்டகாசமாக ஆடி 38 பந்துகளில், ஒரு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 55 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதனால், 18.4 ஓவரில் நியூசிலாந்து 4 விக்கெட் மட்டுமே இழந்து 152 ரன் விளாசி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. நியூசியின் சோபி டிவைன் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
