×

மயாமி ஓபன் டென்னிஸ் ஆண்ட்ரீவா ஆதிக்கம்: கெஸ்லரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா, 2-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தினார். அமெரிக்காவின் மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் ரஷ்ய இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா (18), அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் (26) உடன் மோதினார். துவக்கத்தில் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய மிரா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக கைப்பற்றினார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஈடுகொடுத்து ஆடிய கெஸ்லர், டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரீவா, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

* ஆடவர் ஒற்றையரில் அலெக்ஸ் அபாரம்
மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீரர் அலெக்ஸ் மைக்கேல்சன், இத்தாலி வீரர் மாத்தியா பெலூச்சி மோதினர். இப்போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அலெக்ஸ் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய அவர் அந்த செட்டையும் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Miami Open Tennis ,Andreeva ,Kessler ,Miami ,Miami Open Tennis Women's Singles ,Mira Andreeva ,McCartney Kessler ,Miami Open Tennis Tournament ,Miami, USA… ,
× RELATED ஈரான் மீதான போரால் பிபா உலக கோப்பை அட்டவணையில் மாற்றமா?