ஆக்லாந்து: தென் ஆப்ரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நேற்று, நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில் 3வது டி20 போட்டி, ஆக்லாந்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து தென் ஆப்ரிக்காவின் டோனி டி ஜோர்ஸி, வியான் முல்டர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முல்டர் ரன் எடுக்காமலும், ஜோர்ஸி 15 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பின் வந்தோரில் கொபானி மொகோனா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 26 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது. அதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் டெவான் கான்வே 26 பந்துகளில் 39, டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 63 ரன் விளாசினர். டிம் ராபின்சன் 17 ரன் எடுத்தார். 16.2 ஓவரில் நியூசி. 2 விக்கெட் மட்டுமே இழந்து 137 ரன் விளாசியது. அதனால், 8 விக் வித்தியாசத்தில் அட்டகாச வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
