தனி அணி அமைக்க ஆலோசனை: ராமதாசை மீண்டும் சந்திக்க சசிகலா முடிவு

திண்டிவனம்: சசிகலா கடந்த வாரம் அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவரது கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில் தமிழகத்தில் தனி அணியாக செயல்பட்டு அதிமுக மட்டுமின்றி அரசியலில் தனக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வாக்குகளை பிரிக்க முடிவெடுத்தார். அதன்படி கடந்த 11ம் தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரத்துக்கு திடீரென வந்த சசிகலா, அரசியலில் தன்னைபோல் உள்கட்சி துரோகம் மற்றும் பாஜ நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தான் சிறைவாசம் சென்றபோது தன்னைப்பற்றி நகைப்புடன் கலாய்த்திருந்த ராமதாசை, சசிகலா சந்தித்து பேசியது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இருவரும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம், துரோகிகளுக்கு எப்படி பாடம் புகட்டுவது என்பது குறித்து விவாதித்ததாகவும் தகவல் வெளியானது.

தவெகவுடன் இணைந்து 3வது அணி வலுவாகுமா? என்ற சலசலப்பு எழுந்த நிலையில், அதற்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்தார். எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதை தெளிவுபடுத்த, அடுத்தகட்ட நகர்வுக்கு வந்த சசிகலா, தைலாபுரம் தோட்டத்துடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்பட்டது. இதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும், தனது கட்சியின் தலைமை நிர்வாக குழுவை கூட்டி கருத்துக்களை கேட்டறிந்தார். கூட்டணி கதவுகள் முழுமையாக அடைபட்டு விட்ட நிலையில் தற்போதைய தேர்தலை சந்திப்பதற்கான ஒரேவழி சசிகலாவுடன் இணைந்து தனி அணியாக பயணிப்பது அல்லது தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுப்பது எனும் முடிவுக்கு ராமதாஸ் வந்துள்ளதாக தெரிகிறது.

திமுக, அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பரபரப்பு தொற்றியுள்ள இச்சூழலில் ராமதாசை சந்திக்க இன்று மீண்டும் சசிகலா திடீரென தைலாபுரம் தோட்டத்துக்கு வர உள்ளார். இந்த சந்திப்பின்போது தனித்து விடப்பட்ட சக்திகளை ஒருங்கிணைத்து தனி அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பது, அதிமுக மட்டுமின்றி அரசியலில் தனக்கு நெருக்கடி கொடுக்கும் பாஜவுக்கும் பாடம் புகட்டுவது குறித்து விவாதித்து முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்குபின் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதால் தைலாபுரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: