மரக்காணத்தில் துணிகரம் முருகன் கோயில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை

மரக்காணம், பிப். 16:  மரக்காணம் முருகன் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழனி ஆண்டவர் கோயில். இக்கோயிலில் பவுர்ணமி, கிருத்திகை போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழககம். இதில் கலந்து கொள்ள மரக்காணம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதனால் கோயில் உண்டியலில் பக்தர்கள் ஆர்வமுடன் காணிக்கை செலுத்துவார்கள்.

சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் ஆண்டுதிருவிழா முடிந்ததும் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கோயில் பூசாரி பூஜைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது கோயில் முன்பிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் பூசாரி ஊர் மக்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மரக்காணம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த கோயிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்காணம் பகுதியில் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை மற்றும் வீடுகளில் கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். எனவே போலீசார் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: